சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்திற்கு தடை உத்தரவு!

பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘ஹீரோ’. இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளது.

2016ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தயாரித்து 24AM பேனரில் வெளிவந்த திரைப்படம் ‘ரெமோ’. அதை தொடர்ந்து, வேலைக்காரன் & சீமராஜா படங்களை இந்நிறுவனம் தயாரித்தது. இப்படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய போதிலும், தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த செய்திக்கு ஆர்.டி.ராஜா மறுத்து வந்தார்.

தற்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் 2018ம் ஆண்டு கோவையில் உள்ள டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஆர்.டி.ராஜா திரைப்படம் தயாரிப்புக்காக ₹10,00,00,000 கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை 10 மாத தவணையில் திருப்பி தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். ஆர்.டி.ராஜா தான் சொன்ன தேதிக்குள் பணத்தை திருப்பி தராத காரணத்தால் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ஆர்.டி.ராஜா அளித்த வங்கி காசோலையை வங்கியில் செலுத்தியுள்ளது. அந்த காசோலை பணமின்றி, வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்.டி.ராஜா மீது டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் பண மோசடி வழக்கு ஒன்றை தோடுத்துள்ளது.

இப்படி இருக்க, சிவகார்த்திகேயன் நடித்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘ஹீரோ’ திரைப்படம் வெளியிட டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ஏன் தடை விதித்துள்ளது என்பது தான் அனைவரின் கேள்வியாகும். விஷயம் என்னவென்றால், ஆர்.டி.ராஜா டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கும் போது, ஆர்.டி.ராஜாவின் நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் அப்போது பெயரிடப்படாத திரைப்படங்களான ‘தயாரிப்பு எண் 5, தயாரிப்பு எண் 6 மற்றும் தயாரிப்பு எண் 7’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வந்ததாம். ‘தயாரிப்பு எண் 6’ திரைபோடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, பி.எஸ்.மித்திரன் இயக்கி வந்துள்ளார். இப்படம் சுமார் 85% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தினை தன்னுடைய 24AM ஸ்டுடியிஸ் தயாரிப்பிலிருந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு அமைதியாக கைமாற்றியுள்ளார் என்றும், இந்த ‘தயாரிப்பு எண் 6’ கைவிடப்பட்டு விட்டதாக ஆர்.டி.ராஜா பொய் சொல்கிறார் என்று டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களை குற்றச்சாட்டாக குறிப்பிட்டு, டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம், ஆர்.டி.ராஜா, அவருடைய தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ், கடன் பத்திரத்தில் ஜாமீன்தாரராக கையொப்பமிட்ட இருவர் மற்றும் ‘ஹீரோ’ திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.கணேசன், 24AM ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் ‘தயாரிப்பு எண் 5’, ‘தயாரிப்பு எண் 7’ மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஹீரோ’ ஆகிய மூன்று படங்களையும் வெளியிட தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்மந்தமாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீஸ், அந்த நிறுவனம் பெற்றுக்கொள்ளமல் திருப்பி அனுப்பியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response