ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்..!

எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன். அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ராஜபீமாவிற்கு எப்படி இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன்.
ஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டார். நான் அவரது பின்னணி இசையுடன் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது, மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜபீமாவின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திங்க் மியூசிக் பல ஆல்பங்களை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் புகழ்பெற்றது. ராஜபீமா சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மனிதன் – மிருகம் முரண்பாடுகளை பற்றி பேசும் இந்த ராஜபீமா, பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படப் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Leave a Response