மோடி அரசை விரட்டும் நேரம் வந்து விட்டது : நாராயணசாமி ஆவேச பேச்சு..!

மோடி அரசை விரட்டும் நேரம் வந்து விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு வந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மம்தாவின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மம்தாவின் போராட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம் என்றும், மோடி அரசை விரட்ட நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக நேர்மையான அதிகாரிகள் மீது ஆளும் பாஜக அரசு சிபிஐயை வைத்து பொய்வழக்கு போடுகின்றனர் என கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Response