தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை – எச் ராஜா பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி..!

பெரியார் சிலைக்கு உயிர் இருக்கிறதா என்ற எச் ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கஜா நிவாரண பணிகளை முதல்வர் எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு டீக் கடைகளில் டீக்குடிப்பது ஊரை ஏமாற்றும் செயலாகும். இந்த அரசு இன்னும் முழுமையான நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை.

மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் போராடுவது புதிதல்ல. ஜாக்டோ ஜியோ ஒரு பக்கம், விவசாயிகள் இன்னொரு பக்கம் என போராடி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகின்றனர்.

இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும். சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இதில் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, பினராயி வஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? என்று கூறிய எச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை.

அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தி.மு.க. தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக உங்களை போன்ற ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பு தானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Response