சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி..!

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வகவனம் செலுத்தி வருகிறார். சாய் பல்லவி, தனுஷ் ஜோடியாக நடித்த மாரி-2 படம் டிசம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் – சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. வசூலும் ஈட்டவில்லை.

இந்த படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே வசூலானதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ஒரு தொகையை படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் முன்பணமாக கொடுத்து இருந்தார்.

மீதி தொகை ரூ.40 லட்சத்தை படம் ரிலீசான பிறகு தருவதாக சாய் பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ரூ.40 லட்சத்தை கொடுக்க அவர் முன்வந்தபோது சாய்பல்லவி வாங்க மறுத்துவிட்டார். படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தையும் அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி செயலை தெலுங்கு பட உலகினர் பாராட்டுகிறார்கள்.

Leave a Response