பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படவிருப்பதையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி செல்ல தமிழகம் முழுவதிலும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் 14 ஆயிரத்து 263 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து 10 ஆயிரத்து 445 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பேருந்துகளானது அந்தந்த ஊர்களுக்கு ஏற்றாற்போல் கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம், கே.கே நகர் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்களுக்கான முன்பதிவை செய்துகொள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிய உதவி மையங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்காக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்யவிருப்பதால் பாதுகாப்பு பணிகளிக்காக 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், ஆங்காங்கே 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திருப்பது வயது முதிர்ந்தவர்களுக்கு அலைச்சலை ஏற்படுத்துவதாகவும், இதனால் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response