அனைத்து இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!

பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் வரவேற்புரையாற்றினார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உடுமலைபேட்டை ராதாகிருஷ்ணன், ஜேசிடி பிரபாகரன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: பெரம்பூர் தொகுதி மட்டுமல்ல நடைபெற உள்ள அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். பெரம்பூர் தொகுதியில் ஸ்டாலின் 9 கட்சிகளோடு கூட்டணி வைத்தாலும் சரி, தினகரனோடு கள்ள உறவு வைத்தாலும் சரி, நாம் ஒன்றுப்பட்டு உழைத்தால் மிகப்பெரிய வெற்றியை வெற்றி பெற முடியும்.

அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு, ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலர் கணக்கு போட்டார்கள், ஆனால் அந்த கணக்கையெல்லாம் முறியடித்து ஆட்சி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது.

திமுக , அமமுக கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக மட்டும் தான் கொள்கைகளை கடைபிடித்து கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறியதாவது, நடைபெற இருக்கின்ற இடைத் தேர்தலுக்காக தேர்தல் பணிகளை நாங்கள் இப்போது இருந்தே துவக்கி இருக்கிறோம்.

30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெறும்.

பத்திரிக்கையாளரை தாக்கியது திமுக நிர்வாகி அல்ல என்று ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு, திமுக இப்பொழுது அல்ல, கருணாநிதி காலத்தில் இருந்தே பொய் மட்டுமே கூறி வருகிறது என்று கூறினார்.

Leave a Response