திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, புளூவேல், மதுரவீரன் என பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் நடித்து வரும் படங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார் பூர்ணா.
அப்போது அவர் கூறியதாவது:-
“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இந்த படத்தில் ரவுடி போலீஸாக நடித்துள்ளேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விமலையும், சிங்கம் புலியையும் துரத்தி துரத்தி அடிப்பது தான் எனது வேலை. நிறையமுறை நிஜமாகவே அடித்துவிட்டேன்.
மீ டூ விவகாரம் பற்றிய கேள்விக்கு:
மீ டூ விவகாரத்தை பொறுத்தவரை அதற்கு நான் ஆதரவாக நிற்கமாட்டேன். ஏனென்றால் ஒரு விஷயம் நடக்கும் போது, உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்து ரியாக்ட் செய்தாலும் அது வேஸ்ட். மேலும், இந்த விவகாரத்தால் எனது நெருங்கிய ஆண் நண்பர்கள் கூட ஜாலியாக பேசவே பயப்படுகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக அரட்டை அடித்த காலம் மலையேறி போய்விட்டது. இது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல் என்றே சொல்லுவேன்”, எனக் கூறினார் பூர்ணா.