“பெருமாளே” புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்று – திருப்பதியில் அமைச்சர் மணிகண்டன் வேண்டுதல்..!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்று பெருமாளே என திருப்பதியில் அமைச்சர் மணிகண்டன் வேண்டிக்கொண்டார்.

கஜா புயல் கடந்து சென்று ஒரு வாரத்துக்கு மேலாகியும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் மின்சாரம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால், மின்சாரம் முழுமையாக வழங்க சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

பிள்ளைகளைப்போல் வளர்த்த பல ஆயிரம் தென்னம்பிள்ளைகள் ஒரே நாளில் வீழ்ந்துவிட்டதால், வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். உயிர், உடமை, வாழ்வாதாரம் என அத்தனையையும் ஒரு நாள் புயலில் தொலைத்துவிட்ட மக்கள், அரசின் நிவாரணம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.

இதனிடையே ஆண்டுக்கு ஒரு முறை, இயற்கை சீற்றத்தால் ஏதாவது பெரும் பாதிப்பு தமிழகத்துக்கு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதிக்கு சென்று பெருமளே எங்கள் தேசத்தை காப்பாற்று என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வேண்டிகொண்டார். தரிசனத்திற்குப் பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது, “கஜா புயல் தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் விரைவில் மீள வேண்டும். தமிழக மக்கள் சிறப்பாக வாழ வேண்டும். எதிர்வரும் காலங்களில் இது போன்ற சில இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை சிறப்பாக கையாளும் திறனை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்” என்றார்.

Leave a Response