குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை போராட்டத்தில் குதித்த மன்னார்குடி மக்கள்..!

மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மன்னார்குடியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் அரசின் மெத்தன போக்கை கண்டித்து மறியல் நடந்து வருகிறது.

மன்னார்குடியில் 4 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இல்லை. அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றியுள்ள எந்த கிராமங்களிலும் மின்சார வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் கூட மின்சார வசதி இல்லை. இதனால் மக்கள் அங்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனால் அரசும் அதிகாரிகளும் இதுவரை அங்கு எட்டி பார்க்கவில்லை. மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அழைத்தும் கூட இதுவரை அங்கு அரசு அதிகாரிகள் வரவில்லை. மன்னார்குடியில் உள்ள இளைஞர்கள் அமைப்பு மட்டுமே மருத்துவ வசதிகளையும், தற்காலிக குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள்தான் உணவு தயார் செய்து கொடுப்பது.

இதையடுத்து மன்னார்குடியில் 10க்கு அதிகமான இடங்களில் மறியல் நடக்கிறது. மக்கள் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சித்தேரி, வடபாதி, அசேஷம், தேரடி, தென்பாதி, சோழபாண்டி, பெருகவாழ்ந்தான், மன்னைநகர் உள்ளிட்ட கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் சித்தேரி கிராம மக்கள் அங்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்தனர். தண்ணீர் கொடுக்காமல் எங்கும் நகர கூடாது என்று சிறைபிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்டா பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு வரும் நிலையில் போராட்டம் நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response