கன மழை பெய்தும் நிரம்பி வழியத கோவில் குளங்கள்…

tempel
பருவமழை மற்றும் புயல் காரணமாக இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 924 ஏரிகளில், பெரிய ஏரிகளான பிள்ளைப்பாக்கம் ஏரி, நந்திவரம் ஏரி, மணிமங்கலம், சோமங்கலம், மானாமதி, தாயூர் உள்ளிட்ட 241 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி இன்னும் ஒரு அடி உயர்ந்தால் முழுக்கொள்ளளவை எட்டி விடும். நிரம்பிய ஏரிகளிலிருந்து, உபரிநீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதுபோல், தாமல், தென்னேரி, கொலவாய், கொடுங்கை உள்ளிட்ட 258 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. மேலும், 425 ஏரிகள் 50 சதவீதத்துக்குள்ளாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

காஞ்சிபுரம் நகரில் அதிகளவில் கோயில்கள் உள்ளன. அதுபோல், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்தரமேரூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும், ஏராளமான குளங்கள் உள்ளன.
கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையில் ஏரிகள் நிரம்பியது போல், கோயில் குளங்களுக்கு நீர்வரத்து இல்லை.

இதற்கு, கோயில் குளங்களைச் சுற்றிலும் குளத்துக்குச் செல்லும் மழை நீரைத் தடுக்கும் வகையில் கடைகள், கட்டடங்கள் பெருகிவிட்டதே காரணமாகும். இதனால் சாலைகள், தெருக்களில் அதிக நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. எனவே, குளத்துக்கு வரும் நீரைத் தடுக்கும் விதமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கோயில் குளத்துக்கு நீர்வரத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Response