இயக்குனர், நடிகர் மணிவண்ணன் இன்று சென்னையில் காலமானார்!

Manivanna

இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58. அவருடைய உடல் நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். நடிப்பதையும் வெகுவாக குறைத்து கொண்டிருந்தார்.

கடைசியாக நாகராஜ சோழன் படத்தை இயக்கியிருந்தார். கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடியது. இந்தப் படத்துக்குப் பிறகு தாலாட்டு மச்சி தாலாட்டு உட்பட 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

மணிவண்ணன் பற்றிய சில குறிப்புகள்:

  • மணிவண்ணன் 1980-களில் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் அமைதிப் படை 2, இயக்குனர் மணிவண்ணனின் 50வது படம் என்ற அடைமொழியோடு சமீபத்தில் வெளியானது.
  • 50 படங்களை இயக்கிய மணிவண்ணனின் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. அதற்கு முன் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற படங்களில் பணியாற்றியவர். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும்.
  • கொடி பறக்குது பறக்குது படத்தில் வில்லனாக அறிமுகமான மணிவண்ணன், வில்லன், காமெடியன், குணசித்திர வேடம் என  கிட்டத்தட்ட 600 படங்கள் வரை நடித்துள்ளார்.
  • எந்தவொரு இயக்குனரும் செய்திராத ஒரு சாதனையாக பன்னிரெண்டே நாட்களில் ஒரு படத்தை எடுத்து  முடித்தார் மணிவண்ணன். அது வெள்ளிவிழா கொண்டாடிய திகில் படம் “நூறாவது நாள்”.
  • சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொடிபறக்குது படத்தில் தான் முதன் முதலாக நடித்தார் மணிவண்ணன். அதன் பிறகு, ரஜினியின் நெருங்கிய நண்பராகி விட்டார். ரஜினி நடித்த பிரமாண்ட வெற்றிப் படங்களில் நிச்சயம் மணிவண்ணன் இருப்பார். படையப்பா, சிவாஜி போன்ற படங்களில் ரஜினியே விரும்பி அழைத்து அந்த வேடங்களைச் செய்யச் சொன்னார்.
  • ரஜினியுடன் அவர் நடித்த கடைசிபடம் சிவாஜி. அந்த படமும் இதே ஜூன் 15-ல் தான் வெளியானது. அதே ஜூன் 15-ல் தான் அவர் உயிரும் பிரிந்துள்ளது.
  • மணிவண்ணனின் நய்யாண்டி நடிப்புக்கு தான் மிகப் பெரிய ரசிகர் என்று மேடையிலேயே அறிவித்தார் ரஜினி.
  • இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் – தமிழ் உணர்வாளர் என பலமுகம் கொண்ட மணிவண்ணன் எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். எந்த ஒரு மேடையிலும் தன மனதுக்கு சரியென பட்டால் நிச்சயம் பேசுவார்.
  • உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்களை பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மணிவண்ணன், புரட்சிகரமான புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் மிக்கவர். முக்கிய பிரச்சினைகளுக்கு ஓடி வந்து குரல் கொடுப்பவர்.