தில்லு முல்லு – விமர்சனம்!

default9

தேவையில்லாமல் பழைய நல்ல படத்தை ரீமேக் செய்து பணத்தை வீணடிப்பது எதற்கு? என பல வாதங்கள் இருந்து வருகின்றது. ஆனாலும் ரீமேக் செய்யும் இயக்குனர்கள் ஒன்லி தீம். மற்றபடி கதையை மாற்றி எடுத்துள்ளோம் என சொல்லி எடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் ரீமேக் படங்களை மக்கள் விரும்புவதில்லை, இதற்கு சான்று பல ரீமேக் படங்களின் படுதோல்வி. இந்த வகையில் இந்த தில்லு முல்லுவை எடுத்து கொண்டால், ஓரளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ரஜினி, காமெடி வேடத்தில் நடித்த முதல் படம். பெரிய வெற்றி,ரஜினிக்கு காமெடி நடிப்பும் சிறப்பாக வரும் என நிருபித்த படம்.

படத்தின் கதை: வேலைவெட்டி இல்லாமல் தன்னுடைய தங்கை மற்றும் மாமாவுடன் சென்னையில் வசித்து வருகிறார் சிவா. சிவாவின் அப்பா ஒருவருக்கு செய்த உதவியின் பலனால் வீட்டை இழந்து கடனில் இருக்கும் சிவாவிற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. அவருடைய மாமா இளவரசு, தன்னுடைய நண்பன் பிரகாஷ்ராஜின் மினரல் வாட்டர் கம்பெனியில் சிவாவை சேர்த்துவிட முடிவெடுக்கிறார். முருக பக்தரான பிரகாஷ் ராஜுக்கு வேலையில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்வது பிடிக்காது. இன்டர்வியூவுக்கு செல்கிறார் சிவா. தன்னுடைய பெயருக்கு விளக்கம் சொல்லும் விதமே பிரகாஷ் ராஜூக்கு சிவாவை பிடித்துவிட உடனே வேலைக்கு அமர்த்துகிறார்.

பொய் சொல்லி மேட்ச் பார்க்க போய், பிரகாஷ்ராஜிடம் மாட்டி பின் அது என் தம்பி கங்குலி கந்தன், நாங்கள் இருவரும் இரட்டையர்கள் என பொய் சொல்ல அதுவே வேதாளம் போல பின் தொடர்கிறது. இதற்கிடையில் தம்பியின் பேரில் பிரகாஷ்ராஜ் மகளை காதலிக்கிறார் சிவா. பசுபதிக்கு தான் மகளை திருமணம் செய்து வைப்பேன், கந்தனுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்ற பிரகாஷ்ராஜின் பிடிவாதம். கடையிசியில் இந்த காதல் கைகூடியதா? அந்த பொய்யின் விளைவுகள் என்ன, பிரகாஷ் ராஜ் உண்மையை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஒரே உருவத்தில் அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள சிவாவின் பலமே அவருடைய அசாதாரணமான முகபாவனைகள் தான். ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைக்கிறார்.

தீவிரமான முருக பக்தராக வருகிறார் பிரகாஷ் ராஜ். சிவா செய்யும் தில்லு முல்லுகளை அறியாத அப்பாவியான முகம். நாயகி இஷா தல்வார் பொருந்தாத முகம், வசனங்கள் சரியாக சின்க் ஆகவில்லை. அழகு பதுமையாய் வந்து போயிருக்கிறார். அரை குறை ஆடையில் படம் முழுக்க கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார்.

சிவாவின் நண்பனாக வரும் வெண்ணிலா சூரி, சிவாவின் மாமாவாக வரும் இளவரசு, கோவை சரளா, பிரகாஷ்ராஜிடம் மானேஜராக பணிபுரியும் மனோபாலா, நடிகராக வரும் சத்யன் ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

படத்தின் கிளைமாக்சில் மாப்பிள்ளை கோலத்தில் என்ட்ரி ஆகிறார் சந்தானம். வழக்கம்போல் தன்னுடைய பஞ்ச் வசனங்களால் கடைசி 5 நிமிடங்களை மேலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘தில்லு முல்லு’ பாடலுக்கு இருவரும் இணைந்து திரையில் தோன்றி நடனமும் ஆடியிருக்கிறார்கள். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

லட்சுமணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்கு இதமாய் காட்சியளிக்கின்றன. ப்ரவின், ஸ்ரீகாந்த் இருவருடைய எடிட்டிங் காட்சிகளின் கோர்வைக்கு உறுதுணையாய் இருக்கின்றன. ஆனாலும் பாடல்களில் கத்தி நீட்ட தவறியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் களைகட்டுகிறது. கடந்த படத்தில் கோட்டை விட்டாலும், பெரிய இயக்குனர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது, அந்த படத்தின் இயல்புக்கும், இயக்குனரின் புகழுக்கும் சிறிதும் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் பத்ரி.