முதல்வர் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலதடை : உச்ச நீதிமன்றம்..!

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சென்னை ஹைகோர்ட், அக்டோபர் 12ம் தேதி அளித்த தீர்ப்பில், புகாரில் முகாந்திரம் இருப்பதாலும், லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வர் அதிகாரத்தின்கீழ் வரும் துறை என்பதால் சிபிஐ விசாரணை நடத்துவதே சரி என்று தெரிவித்தது. இதையடுத்து முதல்வருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து, முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர், அரியமா சுந்தரம், முதல்வர் தரப்பில் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத்துறை இதுகுறித்து விசரித்து வருகிறது என்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றார். ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி சிபிஐ விசாரணைக்கு இல்லாவிட்டால், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காவது உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது முக்கியமான ஒரு கேள்வியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திமுக தரப்புக்கு எழுப்பினார். நெடுஞ்சாலைத்துறையில், முறைகேடு என்று தெரியவந்தால், டெண்டரை ரத்து செய்யத் தானே நீங்கள் கோரியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த ஒரு வழக்கும் நீங்கள் தொடரவில்லை. ஆனால் முதல்வருக்கு எதிராக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் முன் வைத்தீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி 4 வாரங்களுக்குள், சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் முதல்வர் தரப்புக்கு தற்காலிகமாக நிம்மதி ஏற்பட்டுள்ளது. 18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும், முதல்வர் தரப்புக்கு மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பை சமீபத்தில் ஹைகோர்ட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response