மீன்வளத்துறை அமைச்சர் கருவாட்டுத்துறை அமைச்சராகி விட்டார் – ஜெயக்குமாரை தாக்கும் தங்க தமிழ்ச்செல்வன்..!

அமைச்சர் ஜெயக்குமாரை தங்க.தமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சசிகலாவால்தான் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால், இன்று அவர் கருவாட்டுத் துறை அமைச்சராக மாறி நிற்கிறார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் நேற்று முன்தினம் இரவு முதல் நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.

நேற்று மாலையில் இருந்து ஐந்தருவியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புஷ்கர விழாவிற்காக இங்கு வந்து உள்ளோம். நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் குடிநீர் பிரச்சினை, மின்சாரம் தடை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ம்தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளோம்.

தங்களுக்கு எப்போதும் தோல்வி பயம் இல்லை. எங்களிடம் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு பறித்துவிட்டது. எங்களுக்கு தீர்ப்பு எப்போது வரும் என எங்களுக்கு தெரியாது.

தீர்ப்பு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரை மாற்றி ஆட்சியை நடத்துவோம். வரும் 27 ம் தேதி அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரை வருகிறார். அப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை சந்திக்க உள்ளோம்.

சசிகலாவால்தான் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால், இன்று அவர் கருவாட்டுத் துறை அமைச்சராக மாறி நிற்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் தான் தவறு செய்யவில்லை என மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Leave a Response