கதையுள்ள படங்களின் வரிசையில் “ஜருகண்டி” நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் – நிதின் சத்யா..!

வணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

இது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.

Leave a Response