நம்முடைய கடந்த காலத்தை ’96’ படம் திரும்பிப் பார்க்க வைக்கும்-விஜய் சேதுபதி..!

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ’96’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது,

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் தான் இந்தப் படத்தின் இயக்குனர்.

1996ம் ஆண்டு தஞ்சாவூரில் +2 படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தக் கதை ஒரே இரவில் நடக்கிறது.

என்னுடன் படித்த சக மாணவியாக த்ரிஷா நடித்திருக்கிறார். சின்ன வயது விஜய் சேதுபதி, த்ரிஷாவாக நாங்களே நடிக்கவில்லை. நாங்கள் அப்படி நடிக்க இயக்குனர் விரும்பவில்லை.

நான் படத்தில் டிராவல் போட்டோகிராபராக நடித்திருக்கிறேன்.

த்ரிஷா நடித்த முதல் படமான ‘லேசா லேசா’ படம் வெளிவந்த போது, நான் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

அவருடன் நடித்தது நல்ல அனுபவம். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் மெனக்கெட்டு நடிப்பார். தமன்னா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோருடன் நடித்த போது அவர்களின் உழைப்பு தெரிந்தது. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் நடிக்கிறார்கள். அதனால்தான், இத்தனை ஆண்டு காலம் அவர்களால் வெற்றிகரமாக சினிமாவில் இருக்க முடிகிறது.

’96’ படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த போது பயமாக இருக்கிறது. நம்முடைய கடந்த காலத்தை இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைக்கும்,” என்கிறார் விஜய் சேதுபதி.

Leave a Response