களரி – விமர்சனம் இதோ..

நட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செனித் கெலோத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், வித்யா பிரதீப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.மேலும் சம்யுக்தா, விஷ்ணு, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், மீரா கிருஷ்ணா, அஞ்சலி தேவி, கோச் ரவி, கிருஷ்ண தேவா, டாக்டர் ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தங்கை மேல் அபரிமிதமான பாசம் வைத்திருக்கும் ஒரு அண்ணனுக்கு அதே தங்கையால் ஏற்படும் பிரச்சினையும், ஒருவர் மீதான அளவுக்கதிகமான நம்பிக்கை உடையும்பட்சத்தில் நம்பிக்கை வைத்தவரின் வாழ்க்கையில் என்ன நடைபெறும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

கேரளாவின் கொச்சி மாநகரில் ‘வாத்துருத்தி’ என்னும் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியை கதையின் மையமாகக் கொண்ட படம் இது.

நாயகன் கிருஷ்ணா அந்தப் பகுதியில் நீண்ட வருடங்களாக வசித்து வரும் தமிழர் குடும்பம். மளிகைக் கடை வைத்திருக்கிறார். தன்னுடைய ஒரேயொரு தங்கையான சம்யுக்தா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். இவருக்கும் ஒரு போபியோ நோய் உள்ளது. அது பயம்.. யாரை பார்த்தாலும் பயம்.. எதற்கெடுத்தாலும் பயம்.. ரத்தத்தை பார்த்தாலும் பயம்.. பட்டாசு வெடித்தாலும் பயம்.. இப்படியொரு பயத்தோடு வாழும் அப்பிராணி இவர்.

இவருடைய அப்பாவான மாரி என்னும் எம்.எஸ்.பாஸ்கர் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டேயிருப்பவர். வீட்டில் தன்னை யாரும் மதிப்பதில்லையே என்கிற கோபத்தில், மகளுக்கு வரும் வரன்களையெல்லாம் ஏதாவது பொய் சொல்லித் தட்டிக் கழித்துக் கொண்டேயிருக்கிறார். இவருடைய மனைவி மீரா கிருஷ்ணன். கட்டின பாவத்திற்காக சோறு போட்டு கணவன் என்ற அந்தஸ்தையும் கொடுத்து எம்.எஸ்.பாஸ்கரை காப்பாற்றி வருகிறார்.

சம்யுக்தா அந்தப் பகுதியிலேயே கார் டிரைவராகவும், மாமா வேலை பார்ப்பவனாகவும் இருக்கும் அன்வர் என்னும் விஷ்ணுவை அவனைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமலேயே காதலிக்கிறார். இதேபோல் சம்யுக்தாவின் நண்பியான பியூட்டி பார்லர் வைத்திருக்கும் நாயகி வித்யா பிரதீப், கிருஷ்ணாவை தீவிரமாகக் காதலித்து வருகிறார்.

தன் மகளின் காதலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கர், வீடு தேடி வந்து பெண் கேட்கும் விஷ்ணுவை அவமானப்படுத்துகிறார். இந்த மோதலில் விஷ்ணு பாஸ்கரை அடித்துவிட.. இதையடுத்து சம்யுக்தா தனது காதலை ரத்து செய்கிறார்.

இந்தக் கோபத்திலேயே தன்னை விரும்பிய மூர்த்தியை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார் சம்யுக்தா. இந்த மூர்த்தி அந்த வட்டாரத்திலேயே செல்வாக்கான சித்திக் என்னும் ஜெயப்பிரகாஷின் கடையில் வேலை செய்பவர்.

குடும்ப நண்பரான ஜெயப்பிரகாஷின் சொல்லைத் தட்டாமல் சம்யுக்தாவுக்கு மூர்த்தியுடன் திருமணம் செய்து வைக்கின்றனர் கிருஷ்ணாவின் குடும்பத்தினர். இதற்குப் பிறகு தான் வைத்திருந்த மளிகைக் கடையை அப்படியே தன்னுடைய மைத்துனர் மூர்த்திக்குத் தாரை வார்த்துவிட்டு ஒரு தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார் கிருஷ்ணா.

இதன் பின்பு ஒரு நாள் சம்யுக்தா பழைய காதலன் விஷ்ணுவுடன் பைக்கில் ஒன்றாகச் செல்வதை பார்த்துவிடுகிறார் கிருஷ்ணா. இதைத் தனது அம்மாவிடம் சொல்ல.. அம்மாவும், மகனுமாக சம்யுக்தாவிடம் அவரது நடத்தை பற்றி சந்தேகம் கேட்டு சண்டையிடுகிறார்கள்.

இந்தக் களேபரத்தில் சம்யுக்தா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் தங்கை மீது அதீத பாசத்தில் இருக்கும் கிருஷ்ணா விஷ்ணு மீது கோபம் கொள்கிறார். இதேபோல் சம்யுக்தாவின் கணவரான மூர்த்தியும் இதற்குத் தூபம் போட விஷ்ணுவை கொலை செய்யவும் இருவரும் திட்டமிடுகிறார்கள்.

இந்த நேரத்தில்தான் தனது தங்கையின் சாவுக்குக் காரணம் விஷ்ணு அல்ல என்பது கிருஷ்ணாவுக்குத் தெரிய வருகிறது. இதற்கடுத்து அவர் என்ன செய்தார்..? உண்மையான குற்றவாளி யார்..? எதற்காக சம்யுக்தா தற்கொலை செய்து கொண்டார்..? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

நாயகன் கிருஷ்ணாவுக்கு இது மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. வெகுளித்தனமான கேரக்டரை தாங்கிப் பிடித்திருக்கிறார்.தங்கைக்காகவே அந்தப் பகுதி இளைஞர்களுக்குத் தேவையானதையெல்லாம் கொடுத்து அவர்களை சரிக்கட்டுகிறார். இதற்காக பணம், பொருள் செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லி செலவு மேல் செலவு செய்கிறார். இப்படியொரு வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு கிருஷ்ணா பொருத்தமாகத்தான் இருந்திருக்கிறார்.

தங்கையான சம்யுக்தா தமிழ் முகம் போலவே இருக்கும் மலையாள நடிகை. தமிழுக்கும் வரலாம். படத்தின் நாயகியாக வித்யா பிரதீப் இருந்தாலும் இவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். காதலனுடன் கொஞ்சல், கோபம், அண்ணனுடன் பாசம் காட்டுமிடம்.. ரவுடிகளிடம் கோபத்தைக் காட்டுமிடம்.. அம்மா, அண்ணனுடன் தன் கஷ்டத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தபடியே பேசும்விதம் என்று பலவித எமோஷன்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி வித்யா பிரதீப்பின் கண்களுக்கு மட்டுமே தனியாக ஒரு ‘ஜே’ போட வேண்டும். தமிழில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் பாடல் காட்சிகளுக்கும், சில காதல் காட்சிகளிலும், திரைக்கதையை நகர்த்தும் காட்சிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் ஸ்கிரீனைவிட்டு கண்ணை நீக்க முடியாத அளவுக்கு நிறைந்திருக்கிறார்.

படம் முழுவதும் மலையாளத் தமிழை பேசி நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது வில்லத்தனம் கலந்த நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இடைவேளையின்போது மகளின் திருமணத்தை தடுத்துவிட்டு, வில்லத்தனமாக ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள். அது போதும் அவரது திறமையை வெளிக்காட்ட..!

அம்மாவான மீரா கிருஷ்ணன் அழுத்தமான தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கருக்கு ரிவீட் அடிப்பதில் இருந்து “எனக்கு மகளா வந்து பொறந்த பாரு.” என்று உண்மை தெரியாமல் மகளை காய்ச்சி எடுப்பதுவரையிலும் அக்மார்க் ஒரு அம்மாவாக தனது போர்ஷனை நிறைவு செய்திருக்கிறார்.

வழக்கமாக தனது நடிப்பில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். “டேய்.. இவன் நிசமாத்தான்டா அடிக்கிறான்.” என்று ஜெயப்பிரகாஷ் கண்டுபிடிக்கும் காட்சியில் அவரது நடிப்பே அந்தக் காட்சியைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது..!

அன்வராக நடித்திருக்கும் விஷ்ணுவும், மூர்த்தியாக நடித்திருப்பவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அந்த இடைவேளை பிளாக்கில் விஷ்ணு கோபத்தைக் காட்டும் இடமும், அவரது நடிப்பும் மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தீக்குளிப்பு நடக்கும் சமயத்தில் அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைத்து அழகாக, ஆனால் கஷ்டப்பட்டு கவர் செய்து படமாக்கியிருக்கிறார்கள். படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

அண்ணன் தங்கை பாசம் என்றாலும் படத்தின் மையமாக இருப்பது எம்.எஸ்.பாஸ்கரின் குடிப் பழக்கத்தினால் விளையும் கேடு.ஆனாலும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படம் என்பதாக இல்லாமலேயே குடும்பக் கதையாக இருந்தும் கிளைமாக்ஸில் எப்படித்தான் இவர்களை முடிக்கப் போகிறார் என்பதை ஆவலோடு காத்திருக்க வைத்திருப்பதில், இயக்குநர் வெற்றி கண்டிருக்கிறார்.

இயக்குநர் கிரண் சாந்திற்கு இயக்குதல் மிக எளிதாக வந்திருக்கிறது. இயக்குதலில் ஒரு குறையும் இல்லாமல் அனைத்துக் கதாபாத்திரங்களையும் நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

முற்றிலும் குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், நிச்சயமாக ஒவ்வொருவரும் பார்க்கலாம் என்றுதான் சொல்ல வைக்கிறது..!

Leave a Response