தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு வகையான படங்களை தேர்ந்தடுத்து, மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரையும், புகழையும் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கட்டத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் அவர் மாறியிருப்பது எதிர்பாராத ஆச்சர்யம்.
இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, “நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதற்கு OTT தளங்கள் தான் எனக்கு பரவலான கற்பனை சுதந்திரத்துடன் அதை செய்யும் வாய்ப்பளிக்கிறது. “ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்” என்ற இந்த நிறுவனம் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான “High Priestess” என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பேனர் மூலம் OTT தளத்துக்கு பல நல்ல உள்ளடக்கங்களை உருவாக்குவதே எனது உடனடி இலட்சியமாகும், அடுத்த தயாரிப்பு தமிழில் இருக்கும்” என்றார்.
ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.