தனி நபருக்கு ராணுவ ஹெலிகாப்டரா?…. நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை..!

தனிநபரான ஓபிஎஸ்ஸின் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை மதுரை நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த ராணுவ ஹெலிகாப்டரில் பாலமுருகன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை நேற்றைய தினம் ஓபிஎஸ் போட்டு உடைத்துவிட்டார். அதாவது டெல்லிக்கு சென்றிருந்த ஓபிஎஸ், உள்கட்சி பிரச்சினைகளுக்காக சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் இதை ஓபிஎஸ் மறுத்தார்.

அப்போது தனது சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்க ஏற்பாடு செய்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்ததாக தெரிவித்தார். இந்த பேட்டியால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதி அல்லாத ஒருவருக்கு ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்ததன் மூலம் நிர்மலா சீதாராமன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவசர காலங்களில் முக்கியமானவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்ப வேண்டும் என்றால் கூட அமைச்சரவையில் அனுமதி பெற்ற பிறகே அனுப்ப வேண்டும் என்பது விதியாகும்.

இதுகுறித்து சென்னை கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் கூறுகையில் தனி நபர் ஒருவருக்கு ராணுவ ஹெலிகாப்டரை முறைகேடாக வழங்கிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்.

Leave a Response