சர்க்கார் : புகைபிடிக்கும் காட்சி-நடிகர் விஜய்க்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்..!

சர்க்கார் பட போஸ்டரில் வெளியான புகைப்பிடிக்கும் காட்சி குறித்து பதிலளிக்க நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்க்கார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி வெளியாகியிருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்க்கார் பட போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் புகைபிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்திய நடிகர் விஜய், இயக்குநர் ஏர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் அந்த பணத்தை வசூலித்து அடையாறு புற்றுநோய் மையத்திடம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது புகைப்பிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Leave a Response