சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதில், உலகத் தமிழர்களின் இதயங்களில் தங்க சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவரும், திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் நிலை பெற வித்திட்டவரும், தன்னை ஈன்ற தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தவருமான அண்ணாவின் நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல், பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களைப் புதுப்பித்தல், புல்வெளி சீரமைத்தல், மின் பணிகள் மற்றும் இதர புனரமைப்புப் பணிகள் 4 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளைப் பெற்று நடிகர் திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட மறைந்த சிவாஜி கணேசன் கலைத் துறைக்கு ஆற்றிய சேவையை போற்றிடும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 1-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response