சேலம் – சென்னை 8 வழிச்சாலை : நிலம் எடுப்பதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரூர் அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், மலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஆனால், இதை கண்டுகொள்ளாத அரசு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. நிலம் அளந்து கையகப்படுத்தும் பணியின்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள் போலீஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்று அரூர் அருகே தனது நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதுபோல மஞ்சவாடி, நடுப்பட்டி நிலம் எடுக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Response