எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாது-சொல்கிறார் தமிழிசை..!

எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் அவரது கார் மீதும் கறுப்புக்கொடியை வீசினர். இதைத்தொடர்பாக 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். நாமக்கல்லில் மக்கள் நலனுக்காகத்தான் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே விமர்சனம் செய்கிறார்கள். திமுகவினர் தங்களின் கறுபபுக்கொடி போராட்டத்தை திரும்ப பெற வேண்டும். மக்கள் நலனில் விருப்பம் இல்லாமல் ஸ்டாலின் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.

அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு குறைகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே ஸ்டாலின் முயற்சி செய்கிறார் . உண்மையான மக்கள் நலன் என்றால் திமுகவினர் பெங்களூருக்குதான் நடைபயணம் செல்ல வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டுவர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது. திமுக- காங்கிரஸ் கட்சியின் 10 வருட கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டு வந்த பெரிய திட்டம் என்ன?

தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டமும் வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் குறியாக உள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஸ்டாலின் தடையாக உள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாது. கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம்ட கிடைத்தாலும் மக்கள் மனதில் அங்கீகாரம் கிடைக்காது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Leave a Response