தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ அமைப்பை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் மீதான வழக்கை உள்ளூர் போலீஸாரே விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Response