சேலம் -சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டம் தேவையற்றது: சு.திருநாவுக்கரசர்..!

சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் தேவையற்ற ஒன்றாகும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க கடந்த செவ்வாய்கிழமை சு.திருநாவுக்கரசர் தில்லி வந்திருந்தார். இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை வியாழக்கிழமை அவர் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை சந்தித்தேன். கமல்ஹாசன் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக மகிழ்ச்சியடைகிறேன். இசசந்திப்பின் போது கூட்டணி குறித்துப் பேசியதாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன. ராதாகிருஷ்ணன், “காங்கிரஸ் கட்சி காலாவதியான புத்தகம்’ என்று தரம்தாழ்ந்த வகையில் விமர்சித்துள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சேலம் – சென்னை எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டின் இயற்கை சமநிலை பாதிக்கப்படும். இயற்கை வளங்களை அழித்து எட்டு வழி பசுமைச் சாலையை போட வேண்டிய தேவை இல்லை. ஏற்கெனவே உள்ள சாலைகளை சீரமைத்தாலே போதுமானது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை வரவேற்கிறேன். விரைவில் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.

 

Leave a Response