இன்று மாலை டெல்லி விரைகிறார் முதல்வர் பழனிசாமி..!

நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை கூட்டம் முடிந்தவுடன் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும் மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு அமைக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த அமைப்பில் மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அதனடிப்படையில் தொடர்புடைய துறைகளில் இருந்து மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை – ஜூன் 17) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

நாளை காலை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல்வர் பழனிசாமி, மாலை பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளளார். பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்து சந்தித்தால்,காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதுடன், அணைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில அரசுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள் குறித்தும் பிரதமரிடம் மனு அளிப்பார் என தெரிகிறது.

Leave a Response