கச்சநத்தம் படுகொலை:உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல்..!

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். ஊர்மக்களின் இன்று 4-வது நாள் தொடர் போராட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டு சமூக விரோதிகளுக்கு எதிராக உரையாற்றி கண்டனங்களை பதிவு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்துக் கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்ததுடன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆறுதலை வழங்கினார்.

பின்னர், 4-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திலும் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்ட சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உரையாற்றினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கச்சநத்தம் கிராமத்தில் வெட்டி கொல்லப்பட்ட 3 பேர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதலுக்கு மாற்றாக கடுமையான சட்டத்தை நிறைவேற்ற மோடி உறுதியளிக்க வேண்டும் என்றார்.

Leave a Response