கர்நாடகத்தில் புதிய பாஜக அரசு தமிழகத்துடன் நட்பாக இருக்கும்-ஸ்டாலின் நம்பிக்கை..!

கர்நாடகத்தில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள பாஜக அரசு தமிழகத்துடன் நட்பாக இருக்கும் என்று நம்புவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவியது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்றார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேசுகையில் கர்நாடகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்கவுள்ள பாஜக, தமிழகத்துடன் நட்பை வளர்க்கும் விதத்தில் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர்கள் அடித்து சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response