வெப்ப நோய் தாக்காமல் இருக்க திருச்சி மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு !

 திருச்சி மாவட்டம் தா.பேட்டை சிவன்கோவில் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், கம்பல் நடுதல், பூப்பந்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கோடைவெயில் காரணமாக ஏற்படும் வெப்பநோய்கள் தாக்காமல் இருக்க 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பாவோடி திடலில் இருந்து ஈரத்துணியுடன் தரையில் படுத்து உருண்டு அங்க பிரதட்சணம் செய்தும், குழந்தைகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இது குறித்து:- தா.பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது வெயில் காலத்தில் நம் முன்னோர்கள் மண் குளியல் செய்வது வழக்கம். சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு அதனை உலர விட்டு பின் குளித்தால் வெப்பத்தால் ஏற்படும் நோய் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர். இதேமுறையில்தான் தற்போது வெளிநாட்டவர் மண் குளியல் என அறிமுகப்படுத்தியுள்ளனர். இம்முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்துள்ளனர் என்பது சிறப்புக்குரியது என்றார். அதனை தொடர்ந்து செந்தாம்பட்டி மதுரை வீரன் சுவாமி கோவிலிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அக்னி சட்டி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் இந்த விழாவில் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Response