இன்டர்நெட் மூலம் வரும் ஆபத்துகளை சொல்லும் “இரும்புத்திரை”..!

விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் புரமோஷன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது என்று சமந்தா சொன்ன விஷயம் ஏறக்குறைய எல்லா மீடியாக்களிலும் செய்தியாகிவிட்டன.

நாக சைதன்யாவை கல்யாணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டாலும் இரும்புத்திரை படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த சமந்தா மீடியாக்களை சந்தித்தார்.

“இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது நமக்கு சுற்றும் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. படத்தின் கதையை கேட்டதும் எனது கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது. இந்த படம் இண்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும், அது எப்படி தீங்கு விளைவிக்கும் என்பதை மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும்! நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பது பற்றியும் இப்படம் விரிவாக பேசும்.”

என்றெல்லாம் உண்மையாகவோ அல்லது பில்ட்அப்புக்காகவே பேசியுள்ளார் சமந்தா. அவர் இந்தளவுக்கு பில்ட்அப் கொடுக்கும் அளவுக்கு இரும்புத்திரை படத்தின் கதை என்ன? ஒருவருடைய ஆதார் கார்டு இன்னொருவரின் கையில் கிடைத்தால் என்னாகும் என்பதுதான் இரும்புத்திரை படத்தின் ஒன்லைன்.

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கிழித்துத் தொங்கப்போட்டிருக்கிறார்களாம். இரும்புத்திரை படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் தலைசுற்றி உட்கார்ந்துவிட்டனராம். இந்தப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பதா வேண்டாமா என்று நீண்ட நேரம் விவாதம் நடைபெற்று இறுதியில் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியாவை நக்கலடித்ததற்காக அந்தப்படத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த பா.ஜ.க.வினர் இரும்புத்திரையைப் பார்த்துவிட்டு என்ன சொல்வார்கள்?

விஷால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

“இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மிக அவசியமானதுதான்! அதே நேரம் அதன் மூலம் நிறைய ஆபத்துகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி பாதிப்புகள் வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற விழிப்புணர்வை தருவதற்காகத்தான் ‘இரும்புத்திரை’ படத்தை எடுத்திருக்கிறேன்” என்கிறார் விஷால்!

Leave a Response