காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நாளை அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த விசாரணையின் போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று தெரிவித்துள்ளது. போதிய மழை இல்லாததால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உடனடியாக கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க, உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளது. முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவே இந்தக் கால அவகாசம் கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response