காவிரி விவகாரம்-மரத்தில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்…!

காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசு இன்னும் கால அவகாசம் கேட்டு இருப்பதால், விவசாயிகள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சமர்பிக்க இன்னும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. இந்த விஷயம் தெரிந்த உடன் விவசாயிகள், உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

டெல்லி சென்று இருந்த விவசாய சங்கங்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உச்சநீதிமன்ற வளாகத்தில் அரியலூரை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். தற்கொலை செய்து கொள்வதாக அவர் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் மரத்தில் ஏறி அவரை மீட்டனர். இதனால் அங்கு போலீசுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. விவசாயி தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து நிறைய விவசாயிகள் தற்போது மரத்தில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Leave a Response