மதுக்கடைகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-வேல்முருகன் கோரிக்கை..!

மாணவர் தினேஷ் நல்லசிவன் மரணத்திற்கு பிறகாவது இத்தகைய சம்பவம் இனியும் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மதுக்கடைகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியான அறிக்கை விவரம்:

நெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மது கடைகளை படிப்படியாக ஒழிப்போம், மூடுவோம் என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை செய்யாததால் தான் மதுவால் இங்கே தொடர் மரணங்கள்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் நல்லசிவன் மரணத்திற்கு பிறகாவது இத்தகைய சம்பவம் இனியும் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மதுக்கடைகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தற்கொலை செய்து கொண்ட தினேஷ் நல்லசிவன் இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response