அமமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி..!

டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில், திமுக தனது கூட்டணியை இறுதி செய்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம் அதிமுகவும் கிட்டத்தட்ட ஓரளவுக்கு கூட்டணியை முடித்துவிட்டது. ஆனால் தேமுதிக, அதிமுகவில் இணையுமா? இணையாதா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இருதினங்களுக்கு முன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். கூட்டணிக்கு 2 தொகுதிகள் போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் கூறிய அவர், இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமமுகவுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response