மே 10-ஆம் தேதி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும்-அய்யாக்கண்ணு திட்டவட்டம்

மே 10-ஆம் தேதி  மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும், யாருக்கும் பயப்பட போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றும், மத்திய அரசு தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் மே 10ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினாலும் சரி, ராணுவமே வந்தாலும் சரி, செத்தாலும் சாவோமே தவிர யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றார்.

தங்களது போராட்டத்துக்கு அனைத்து கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவாக உள்ள நிலையில், காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அய்யாக்கண்ணு உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, தமிழக முதல்வரை பிரதமர் மோடி மதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Leave a Response