மத்திய அரசு தமிழர்களை பகடைக்காயாக மாற்றியுள்ளது-கனிமொழி குற்றச்சாட்டு..!

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகள் நடத்தியது.

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் கனிமொழி எம்பி தலைமையில் மனித சங்கிலி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தயாநிதி மாறன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எம்.பி. கனிமொழி, கர்நாடக தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு தமிழர்களை பகடைக்காயாக மாற்றியுள்ளது என்று குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அரசாங்கம் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை.

இவர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். நம்முடைய உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். மத்திய அரசாங்கம் நடுநிலை அரசாங்கமாக இல்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிரான ஆட்சிதான் நடந்து வருகிறது என்று கூறினார்.

மனித சங்கிலி போராட்டம் சேலம், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Response