கர்நாடகத்தில் பேரவைத் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படமாட்டாது-சீமான்

கர்நாடகத்தில் பேரவைத் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படமாட்டாது, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வந்த பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் மனு அளித்துள்ளார். ஆனால், அந்த மனுவுக்கு பிரதமர் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும், பிரதமர் வருகைக்கு எதிரான போராட்டங்கள் தெரிந்திருந்தும் பிரதமர் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். அப்படி எந்த வாக்குறுதியும் கர்நாடகத்தில் உள்ள கட்சியினரோ, மத்தியில் ஆளும் கட்சியோ தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கூறுவதால் காவிரி வந்துவிடாது.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வது, தாக்குதல் நடத்துவது, சிறையில் அடைப்பது தொடர்ந்து வருகிறது. நமது மண் வளத்தையும், நாட்டின் நலத்தையும் காக்க போராடும் நபர்கள் தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.

Leave a Response