குறுக்கு வழியில் முதல்வராகும் அவசியம் எனக்கில்லை-புதுச்சேரி எதிர்க் கட்சியின் தலைவர் ரங்கசாமி

“குறுக்கு வழியில் முதல்வராகும் அவசியம் எனக்கில்லை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சியின் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த  எதிர்க் கட்சி தலைவர் ரங்கசாமி, “புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கடைமடை பகுதிக்குத் தேவையான காவிரி நீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உரிய அழுத்தத்தைப் புதுச்சேரி அரசு தரவில்லை.

கர்நாடக காங்கிரஸ் அரசை மனதில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அழுத்தம் தரவில்லை.

விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமரிடம் நேரில் சென்று சந்தித்து வலியுறுத்துவேன். தமிழகம் வந்திருந்த பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் வலியுறுத்தியிருக்க வேண்டும்” என்றவரிடம் ‘கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க நீங்கள் முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம் சாட்டியிருக்கிறாரே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “புதிதாகத் தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனவன் நான். குறுக்கு வழியில் கொல்லைப்புறமாக முதல்வரானவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கொல்லைப்புறமாக முதல்வர் ஆக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. குறுக்கு வழியில் என்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி, கொல்லைப்புறமாக அந்தப் பதவிக்கு வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

Leave a Response