காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.. பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை: காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சரமாரியாக சாடியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். ஸ்டாலினின் நடைப்பயணம் காவிரிக்காக அல்ல; அரசியலுக்காக தான் என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

மேலும் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திமுகவின் போராட்டம், தமிழர்களுக்காகவா? கூட்டணிக் கட்சியினருக்காகவா? என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், தமிழகத்தில் தொழில் வாய்ப்பு குறையும் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தொழில் வாய்ப்பு குறைய வேண்டும் என்பதை ஸ்டாலின் விரும்புகிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக போராட்டம் நடத்துவது தமிழர்களுக்காகத்தான் என அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திமுகவின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பிரதமருக்கு எதிரானது அல்ல, தமிழர்களுக்கு எதிரானது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் பெங்களூருவை நோக்கி ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டால் பாராட்டியிருப்பேன் என்றும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தாதது ஏன் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

Leave a Response