படத்தை ரிலீஸ் செய்வதாக கூறி டிக் டிக் டிக் படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது, சக்தி சௌந்தர ராஜன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக விண்வெளியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றால் அது டிக் டிக் டிக் தான். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நேமிசந்த் ஜாபக் நிறுவனத்தின் ஹிதேஸ் ஜாபக் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக கூறி படத்தை வாங்கியிருந்தது.
ஆனால், சமீபத்தில் இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளதால், டிக் டிக் டிக் படத்திலிருந்து வெளியேறியுள்ளது. இதன் விளைவாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதே போன்று தான், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள செம போத ஆகாத படத்திலிருந்தும் இந்நிறுவனம் பின்வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த பிரச்சனையை சரிசெய்து கோலிவுட்டிற்கு உதவி செய்யும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.