காவிரிப் பிரச்னைக்காகத் திருச்சியில் டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்ச நீதிமன்றம் 6 வாரம் கால அவகாசம் கொடுத்து. தமிழகம் வறட்சியில் வாடியபோது அமைதியாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசாங்கங்கள் இப்போது மௌனமாக இருந்துவரும் நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பாக ஒரு வழக்கை மத்திய அரசு தாக்கல் செய்து, மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சிக்கு இன்று காலை வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவரது வாகனத்தை ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள சாலை மரத்தடியில் நிறுத்தியதுடன், அந்த ஜீப்பின்மேல் படுத்துள்ளதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர தவறிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் கலைக்கக் கோரி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளூர் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அந்தப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த லோக்கல் போலீஸார், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு நாடகம் ஆடுவதாகவும் இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்நிலையில் டிராஃபிக் ராமசாமியின் திடீர் உண்ணாவிரதம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response