ஸ்ரீசாந்த் கதையை படமாக்கும் மலையாள தயாரிப்பாளர்!!

இந்தியாவில் எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும் அதை அதனால் அதிக பயன் அடைவது என்னமோ சினிமாதுறையினர் தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் டெல்லி பெண் கற்பழிப்பு வரை ஏராளமான பிரச்சினைகள் இப்படி படமாகியுள்ளன. தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது ‘ஸ்பாட் பிக்ஸிங்’ பிரச்சினை.

அதாவது சூதாட்ட சர்ச்சையில் கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்தின் கதையை சினிமாவாக எடுக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மலையாளத்தில் முன்னணி படத்தயாரிப்பாளர்கள் ஷாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாரிக்கிறார்கள். அந்த படத்துக்கு ‘கிரிக்கெட்’ என்று பெயரிட்டுள்ளனர். இதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன.

கிரிக்கெட் படத்தை பற்றி தயாரிப்பாளர் ஷாஜி கைலாஸ் கூறும்போது, “இது ஸ்ரீசாந்தின் கதைதான். கேரள இளைஞன் ஒருவன் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக இருக்கிறான். கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான். புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதனை கற்பனைக் கதை என்று கூறாமல், கிரிக்கெட் படத்தில் நேரடியாகவே சொல்லப் போகிறோம்” என்றார்.