உ.பி.,யில் என்கவுன்ட்டர்: தவறுதலாக குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாப பலி

hand gun bullets

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின், கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிரான என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை என்கவுன்ட்டரில் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரா அருகே மோகன்புரா என்ற கிராமத்தில், பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவர்களை சரணடையுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து போலீஸாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் என்ற 8 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்தார்.

எனினும் யார் சுட்ட குண்டு அந்த சிறுவன் மீது பட்டது என்ற விவரம் தெரியவில்லை. அதேசமயம் போலீஸார் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response