கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் ஓகி புயல் காரணமாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. மரம் விழுந்து 4 பேர் பலியாகி உள்ளனர். 900 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.
தற்போது கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயல் நகரத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஓகி புயல் அரபிக்கடலை நோக்கி நகர்ந்து சென்றாலும், மீண்டும் மீண்டும் புயல் உருவாகும் என்று கூறப்படுகிறது.