ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல்போன வாகனம்; வேதனையில் வருவாய் துறை அதிகாரி!

colector

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய் துறை ஆய்வாளர் ஒருவரின் இருசக்கர வாகனம், அந்த ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல்போன சம்பவம், அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர், செந்தில்நாதன். 32 வயதான இவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சி – பிரிவில், வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய வீடு, திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள குமார் நகரில் உள்ளது.

தினமும் இருசக்கர வாகனத்தில்தான் ஆட்சியர் அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வருவார் செந்தில்நாதன். நேற்றைய தினமும் வழக்கம்போல தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருக்கிறார்கள். மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புற நுழைவு வாயில் பகுதியில், தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார் செந்தில்நாதன்.

வேலை முடிந்து மாலையில் வீட்டுக்குச் செல்வதற்காக வாகனத்தை எடுக்க வந்தவர், தான் நிறுத்திவைத்திருந்த இடத்தில் வாகனம் இல்லாதபோது அதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். சில மணி நேரம் ஆட்சியரக வளாகம் முழுவதும் வாகனத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், வீரபாண்டி பகுதி காவல்நிலையத்தில் செந்தில்நாதன் புகார் அளிக்க, அதன்பிறகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Leave a Response