காற்று மாசுபாடு அபாய நிலையை எட்டிய டெல்லி!

delhi1

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தெளிவான வானிலையின்மை பனி காரணமாகவே, புகைமூட்டம் காரணமாக இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

இருப்பினும் தீபாவளிக்கு பின்னர் புதுடெல்லியில் காற்றின் தரம் அளவு என்பது இரண்டாவது முறையாக மோசமான நிலையை கடந்து உள்ளது. வெளிப்புற காற்றின் தரத்தை நிர்ணயம் செய்யும் காற்று தர குறியீடு (ஏகியூஐ) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காலை 9.30 மணியளவில் 446 ஆக பதிவாகி உள்ளது.

delli

தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள 19 மையங்களில், 12 மையங்களில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதை காட்டி உள்ளது. குர்கானில் குறைவாக 9.30 மணியளவில் 357 ஆக பதிவாகி உள்ளது. புகை பனி மூட்டம், காற்று மாசுபாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

அரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளை ஒரு மணி நேரம் தாமதமாக திறக்க கேட்டுக் கொண்டு உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 9-ல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. நீண்ட தொலைவு செல்லும் ரெயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிமூட்டம் காரணமாக தெளிவின்மை நிலை காணப்படுவதால் ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

டெல்லி விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டது. சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

Air-pollution-in-delhi-schools

ரெயில் சேவையிலும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கவும் கல்வி துறை மந்திரி மணிஷ் சிசோடியா அறிவுரை வழங்கி உள்ளார்.

இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் மோசமான காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளதற்கு டெல்லி, அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை கடுமையாக சாடியுள்ளது. இன்று ஏற்பட்டு உள்ள அவசரகால நிலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவியுங்கள் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response