இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணை- இரட்டை இலையை துளிர்க்க விடுமா தேர்தல் ஆணையம்!

election-comission
தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்குமா? அல்லது துளிர்க்க வைக்குமா? என்பது என்று தெரியவரும்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த கெடுவுக்கு நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், இன்று நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் தேர்தலின் போது சின்னத்திற்காக ஓபிஎஸ், சசிகலா அணிகள் மோதியதால் கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

அந்த சூழலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று சசிகலா தலைமையிலான அணியினரும், ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் லட்சக்கணக்கில் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.
xd3-1
இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தீவிரமாக களத்தில் இறங்கின. இபிஎஸ்-ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் அணியினர் போட்டி போட்டு பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றிய இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்ட விசாரணை கடந்த 6ம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி எ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. இரண்டாம் கட்ட விசாரணை 13ம் தேதி நடந்தது. 3ம் கட்ட விசாரணை கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணை நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் டெல்லியில் உள்ள மைத்ரேயன் எம்பியும் விசாரணையில் பங்கேற்கிறார். இதே போல, தினகரன் அணியினரும் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அறிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், இன்று நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அந்த அணியே உண்மையான அதிமுகவாக கருதப்படும். அவர்களுக்கே அதிமுக பெயர், கட்சி அலுவலகத்தை பயன்படுத்தும் உரிமை கிடைக்கும். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் எடப்பாடி, ஓ.பி.எஸ்.தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்று தினகரன் தரப்பு கூறி வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்தால் நீதிமன்ற படியேறவும் தயராக இருக்கிறதாம் தினகரன் தரப்பு. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்றும் சின்னத்தை கைப்பற்ற போவது யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. அதே நேரத்தில் சின்னத்தை தேர்தல் ஆணையம் துளிர்க்க வைக்குமா? அல்லது பட்டுப்போக வைத்து விடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Leave a Response