துணைவேந்தரை நியமிப்பதில் தொடரும் சிக்கல் : முடங்கியே இருக்கும் அண்ணா பல்கலை., நிர்வாகம்

190615_anna_university_0

சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் மீண்டும் சிக்கல் வலுத்துள்ளது. பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வு குழு காலாவதியாகிவிட்டதே இதற்கு காரணம். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் கடந்த மே மாதம் தேர்வு குழு ஏற்படுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் துணைவேந்தரை நியமிக்காததால், அந்த குழுவிற்கு மேலும் 2 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த அவகாசமும் கடந்த அக்டோபர் 14-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனால் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதில் சிக்கலும், குழப்பமும் வலுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தின் முந்தைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவால் அறிவிக்கப்பட்ட தேர்வு குழுவிலிருந்து லோதாவை தொடர்ந்து, அனந்த பத்மநாபனும் விலகினார். இதனால் தேர்வு குழு செயல்பட முடியாமல் போனது. எனவே இதற்கு பதிலாக புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. துணைவேந்தர் இல்லாததால் பல்கலைகழகத்தின் நிர்வாக பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response