வௌவ்வால்களை பாதுகாக்க தீபாவளியன்று பட்டாசு வெடிக்காத கிராமம்!

 

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே பல ஆண்டுகளாக ஆலமரத்தில் வாழ்ந்து வரும் அரியவகை வௌவ்வால்களை பாதுகாக்க, தீபாவளிப் பண்டிகையன்று அப்பகுதி கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர். காடையாம்பட்டியை அடுத்த பன்னப்பட்டி கிராமத்தில் பல தலைமுறைகளை தாண்டிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வௌவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த வௌவ்வால்களை தெய்வமாக நினைத்து வணங்கிப் பாதுகாத்து வருவதாக கூறுயுள்ளனர். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை, மரத்தின் அடியில் முனியப்பசுவாமியை வைத்து பூஜை செய்து வருகின்றனர். மரத்தில் வசிக்கும் வௌவ்வால்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ எடை வரை இருக்கும் நிலையில், அவற்றிற்கு மருத்துவ குணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதுவரை வௌவ்வால்களை வேட்டையாடவோ, துன்புறுத்தவோ விடாமல் அப்பகுதி கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகள் வெடித்தால் வௌவ்வால்கள் பயந்து மரங்களையும், ஊரையும் விட்டு வெளியேறிவிடும் எனும் அச்சத்தால் அப்பகுதி மக்கள் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் கோவில் திருவிழாக்கள், சுப நிகழ்வுகளில் கூட பட்டாசுகள் வெடிப்பது கிடையாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response